வடிவேல் பாலாஜியின் உடலை பார்த்து டேய் எழுந்து வாடா: கதறி அழுத நடிகர் ராமர்

வடிவேல் பாலாஜியின் உடலை பார்த்து டேய் எழுந்து வாடா: கதறி அழுத நடிகர் ராமர்

மருத்துவமனையில் வடிவேலு பாலாஜியை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை என்று கண்ணீருடன் புலம்பினார் ராமர்.

நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ராமர் கதறி அழுது வேதனையை வெளிப்படுத்தினார்.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, அது இது எது என உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. அவருக்கும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான நடிகர் ராமருக்கும் நீண்ட காலமாகவே நல்ல நட்பு இருந்தது.

அது இது எது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை சிரிக்க வைக்க இவர்கள் இருவரும் சேர்ந்து நிகழ்த்தும் நகைச்சுவைகள் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்த வடிவேல் பாலாஜிக்கு திரைபிரபலங்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வடிவேல் பாலாஜியின் உடல் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் அப்பகுதிவாசிகளும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நகைச்சுவை நடிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அங்கு வந்த ராமர் வடிவேல் பாலாஜியின் உடலைப் பார்த்து கதறி அழுதார். உடன் இருந்தவர்கள் அவரைத் தேற்றினர். மருத்துவமனையில் வடிவேல் பாலாஜியை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை என்று கண்ணீருடன் புலம்பிய ராமர், மரண செய்தி கேட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக தழுதழுத்த குரலில் தெரிவித்தார்.

முழு வீடியோ கீழே உள்ளது.